Sunday, March 19, 2017

விளையாட்டுச் சோலை

ஆதூரசாலையின்  வாயிலில்  சத்யவதியின் ரதம் சென்ற தடங்களை சிறிது நேரம் பார்த்து நின்றிதிந்துவிட்டு பெருமூச்சுடன் திருப்பி உள்ளே நடந்தான் விசித்திரவீரியன் அப்போதே தன் வாழ்வின் இறுதி  தருணங்கள் வேகமாக கடப்பதை உணர்ந்தவனாக இருந்தான். அஸ்தினபுரியின் அரசன் என்று ஊர் அவனை அழைத்தாலும் அவன் உள்ளுற தன் தாயின் சிறு மகனாகவே என்றும் உணர்ந்தான். அவன் தாய் சத்யவதியோ இவன் மூலம் இந்த பாரதவருஷத்தையே  பேணி ஆளும் தலைமுறையை நிறுவிவிடும் முனைப்போடு இருந்தாள் .

தன அறையை நோக்கி நடந்த அவன் கால்கள் நோயுற்று மெலிந்திருந்தன. மூட்டு வீக்கம் வலியைதந்தாலும் அவன் நடையில் எப்போதும் இருக்கும் தளர்வு அன்றிருக்கவில்லை. சற்று வேகமாகவே நடந்தான்.உடைமாற்ற உள்ளே நுழைந்தவனிடம் எங்கோ புறப்படும் ஆயத்தம் தெரிந்ததை எண்ணி அவனிடம் பேச வந்த ஸ்தங்கரிடம் தான் மருத்துவம் இதோடு போதும் என்றும் அணைத்து மருத்துவர்களையும் பரிசளித்து அனுப்பாவிடலாம் என்றும் சொல்லி அனுப்பினான். அவனுக்குத் தெரியும் இனி அவனுக்கு மருத்துவம் தேவையில்லை என.

“அனைவரையும் முகமண்டபத்துக்கு வரச்சொல்லுங்கள்” என்று அவன் சொன்னபோது ஸ்தானகர் முதலில் தயங்கினாலும் பின்னர் இதை எப்போதும் எதிர்பார்த்து காந்திருந்தவராக "ஆணை அரசே" என்று கூறி வெளியே சென்றார். விசித்ரவீர்யனின் ஒவ்வொரு கணமும் உடனிருந்து கண்டவர் ஸ்தானகர். சிறு பிறை நிலவு போல் துவண்டு வெளுத்து சுருங்கிய கைகால்களோடும் எலும்போடு ஒட்டிய தோலோடும் பிறந்து வந்த வைசித்ரவீர்யன் வளர வளர அவன் நோயும் அவனோடே வளர்ந்திருந்தது. என்றோ ஒருநாள் நோயின் வேகம் அவன் உடலைக்கடந்தே தீரும் என அவர் அறிவார். மருத்துவத்தின் மூலமாகவே இததனை ஆடண்டுகள் அவன் உடல் உயிரைத்தரித்திருந்தது. அல்லது அதை அவன் அன்னை சத்யவதியின் பிடிவாதம் என கொள்ளலாம். எந்நேரமும் அணைந்துவிடக்கூடும் அகல் விளக்கை கை கொண்டு காப்பதுபோல் காத்துவந்தாள்.

இன்று அவனை சந்தித்துவிட்டு சென்ற பேரரசி சத்யவதியின்  முகத்தைப்பார்த்தபோது   அவளும் தன பிடிவாதத்தை இழந்துவிட்டாள் எனவே  ஸ்தானகர் உணர்ந்தார். விசித்ரவீர்யன் நாடாள்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு எப்போதும் இருந்ததில்லை.அரசனாக முடிசூட்டிய பின்னும் இவளே அஸ்தினாபுரத்தின் காவல் தெய்வம்.

அவனுக்காகவே அமைக்கப்பட்ட ஆதூரசாலையது. இத்தனை ஆண்ட்டுகளில் எத்தனை எத்தனை மருத்துவர்கள், விடைக்காரிகள், சித்தர்கள், ரிஷிகள். பார்த்தவருஷத்தின் தலைசிறந்த மருத்துவர்கள் அனைவரும் ஒருமுறையேனும் தங்கள் காலடி பதித்த நிலமது. அருகிலேயே இருந்த குடில்களில் எப்போதும் தங்கி மருத்துவம் பார்த்தவர்கள் இருந்தனர்.

ஸ்தானகர் சென்று ஆதூரசாலையில் பணியிலிருந்த எல்லா மருத்துவர்கனளயும், சேவகர்களையும் முகமண்டபத்தில்  குழுமுவதற்கான ஆணைகளை பிறப்பித்தார். நினைவில் ஆழ்ந்தவராக முகமண்டபத்தில் அமர்ந்திருந்தார். பணியாளர்களும், மருத்துவர்களும் அங்கே குழுமத்தொடங்கியிருந்தனர்.

ஸ்தானகரை அனுப்பிவிட்டு அறையை உள்புறமாக தாளிட்டான் விசித்திரவீர்யன். உடையை களைந்து உடைமாற்ற சித்தமானான். அனால் சட்டென எதிர்பாராத ஒரு ஒலிகேட்டு திரும்பினான் . அவன் மஞ்சத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த நீர்குவளை கீழே விழுந்து உருண்டது கண்டு அதிர்த்தவனாக பார்த்தான். மஞ்சத்துக்கு அப்பால் இருந்து பெண் ஒருத்தி எழுந்து நின்றாள்.

சூதப்பெண்!. அஸ்தினாபுரத்தின் அரண்மனை சேடிகளுக்கான பனியுடை அணிந்து  நடுங்கியபடி எழுந்து  நின்றாள். இடுப்பிலிருந்து கழற்றவிருந்த உடையை சட்டென அவன் கைகள் பற்றிக்கொண்டன.

கொஞ்சம் குட்டையான இளம்பெண். பதினாறு வயதிருக்கும். க்ஷத்திரிய பெண்களுக்குரிய லக்ஷணங்கள் நிறைந்த முகம். அவள் தேகம்  பாலிருந்த கண்ணாடி  கலயம் போல் வெளுத்திருந்தது. காட்டில் வழிதவறிவிட்ட மான்போல் மருண்ட பெரிய கண்கள்.  அந்த பெரிய கண்களை தாங்குவதற்காகவே செய்யப்பட்டது போல்  வட்டமான முகம். மெலிந்த உருவம் ஆனால் பேரழகி என பார்பவர் எண்ணும் அத்தனை தன்மையும் நிறைந்தவள்.

திடுக்கிட்டவனாக விசித்திரவீர்யன் நின்றான்.

"பெண்ணே! யார் நீ ? இந்த ஆதூரசாலையில் பெண்கள் பணிபுரிவதில்லையே. இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்" என்றான்.

நடுங்கிய குரலில் பதில் சொன்னாள் - " அரசே, காசி நாட்டின் இளவரசி நான். என் பெயர் அம்பாலிகை ".

விசித்திரவீரியன் அதிர்ந்து போனான. விரைவாய் மேலாடையை எடுத்துபோட்டுக்கொண்டே "மன்னிக்க வேண்டும் தேவி இங்கு உங்களை எதிர்பார்க்கவில்லை. உங்களுக்கு என்ன தேவை சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே" என்றான்.

"நீங்கள் அரசர், நான் உங்கள் மனைவி - நான்தான் உங்களுக்கு சேவைசெய்யவேண்டும் என்று  சியாமை சொன்ன்னாளே" என்று தன நெற்றியை குறுக்கி, சிறு உதடுகளை குவித்துச் சொன்னாள் . அவள் பேசும்போது அகண்ட கண்களில்  இருந்த கருவிழிகள்  அவனை மேலும் கீழும் பார்த்தன. ஒரு குழந்தையா இல்லை பெண்ணா என்று பிரித்தறிய முடியாத தோற்றம்.

அவள் சொன்னவிதம் விசித்ரவீர்யனுக்கு சிரிப்பைத் தந்தது - பணிவாக  விடையளிக்கவே எண்ணினார் ஆனால் அவளைப்பார்த்தால் பிரிவுதான் ஏற்பட்டது .

 "அதற்க்கு நீ என்ன சொன்னாய்."

"நான் அரசருக்கு சேவைசெய்ய மாட்டேன். அவரோடு  விளையாடுவேன் என்றேன்" என்று சொன்னபோது அவள் முகம் மலர்ந்திருந்தது . "அதற்கு அவள் அப்படி எல்லாம் பேசக்கூடாது என்றாள்".

விசித்திரவீரியன் அவள் அகண்ட விழிகளையே பார்த்து நின்றான்.

அம்பாலிகை தொடர்ந்தாள் "சியாமையை  எனக்குப் பிடிக்காது. எப்போதும் என்ன செய்யவேண்டும் செய்யக்கூடாது என்று சொல்லிக்கொண்டே இருப்பாள் - உங்கள் பேரரசியோடு சேர்ந்து இருந்தால் தானும் பேரரசி என்ற நினைப்பு".


விசித்திரவீரியன் சிரித்தான் , " நீங்கள் சொல்லுங்கள், அவளை தண்டித்துவிடலாம்"

"வேண்டாம் வேண்டாம் பாவம் வயதானவள். இரவில் எனக்கு கதைகள் சொல்வாள். எங்கள் காசிநாட்டின் முதுவிறலியைப்போல"

"நீங்கள் சொன்னால் சரிதான்".

"இங்கு வந்ததிலிருந்து பொழுது போவதே இல்லை. அஸ்தினாபுரதில்  வெறுமையாக  இருக்கிறது.  எனக்கு வேலை எதுவும் இருப்பதில்லை. விளையாடவும் முடியவில்லை. என் அக்காகூட இங்கு வந்தபின் என்னிடம் சரியாக பேசுவதே இல்லை - நேற்றுவரை திட்டிக்கொண்டே இருந்தாள் . இன்று தனியாக அறைக்குள் அமர்ந்துகொண்டு என்னை விரட்டுகிறாள்."

"மன்னிக்கவேண்டும் தேவி உன்னை அஸ்தினாபுரத்திற்கு கடத்திவந்ததற்காக வேண்டுமென்றால் காசிக்கு செல்கிறீர்களா"

"இல்லை இல்லை வேண்டாம் எனக்கு இங்கேதான் பிடித்திருக்கிறது. நிறைய நகைகள் அணியலாம், இங்கே சுவையான அப்பம் செயகிறார்கள் தெரியுமா - என்ன ஒன்று, பாண்டூகனை பிரிந்து வந்ததுதான் வருத்தமாக இருக்கிறது"

"பாண்டூகனா யாரது?"

"என் பளிங்கு பொம்மை. வெள்ளையாக உங்களைப்போலவே இருப்பான்"

விச்த்ரவீர்யன்  சிரித்தான் .
"என்னைப்போலவா! உடல் வற்றி கண்கள் சுருக்கப்போய், மூட்டுக்கள் வீங்கியா?"

"இல்லை இல்லை வெள்ளையாக. நீங்கள் சிறுவனாக இருந்தால் எப்படி இருப்பீர்களோ  அப்படி"

"சரிதான்."

"நான் அவனோடு எப்போதும் விளையாடுவேன். என் ஓவியங்களை காட்டுவேன். ஒருமுரை என் தோழி அவனை ஒளித்து வைத்துவிட்டாள் நான் அழுதேன் தெரியுமா ?"

"அப்படியா " என்று சிரித்தான் "ஆமாம் கேட்கவேண்டும் என்று எண்ணினேன் எப்படி இங்கே வந்தாய்?"

"உங்களை பார்க்கத்தான் வந்தேன். யாருக்கும் தெரியாது. சிவை கூட்டிவந்தாள்."

"சிவையா?"

"அவள் சூதப்பெண், அவள் மட்டும்தான் இங்கே நல்லவள். நான் உங்களை பார்க்கவேண்டும் என்று சொன்னேன். யாருக்கும் தெரியாமல். அவள்தான் இந்த உடையை கொண்டுவந்தாள்."

"ஏன் யாருக்கும் தெரியாமல்?"

"அம்பிகைக்கு  தெரியக்கூடாது ! தெரிந்தால் திட்டுவாள். மூத்தவள் என்ற திமிர் அவளுக்கு."

"அக்கா என்றால் பயமோ ?"

"பயமில்லை, அனால் அவள் அதிகாரம் செய்வது பிடிக்காது.அம்பை அக்கா இருந்தால் இவள் இப்படி செய்யமாட்டாள். இங்கு வந்ததிலிருந்து என்னை திட்டிக்கொண்டே இருக்கிறாள். முதலில் திட்டினாள், பின்னர் சாப்பிடக்கூடாது என்றாள், இன்று என்னிடம் பேசாமல் முகம்திருப்பிக்கொண்டாள்."

"ஏன்?"

"ஏன் என தெரியாது. என்னிடம் ஏதோ மறைக்கிறாள் . நேற்று இரவு பேசிகொண்டிருந்தோம். பின்னர் மலர்மஞ்சம் சென்றாள். செல்லும்போது கோபமாகத்தான் சென்றாள். அனால் இன்றுகாலை கொஞ்சம் மகிழ்ச்சியாக தெரிந்தாள். என்ன அக்கா என்று கேட்கப்போனேன். தலை வலி என்று சொல்லி அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டாள். எனக்குத் தெரியும் அவள் சிரித்துக்கொண்டே தனக்குள் எதோ பேசிக்கொண்டிருந்தாள். என்னை பார்த்ததும் தவிர்க்கிறாள்."

"உன் அக்கதானே பாவம் விடு"

"என்ன பாவம்! இந்த மூத்தவர்கள் இருக்கும்வரை இளையவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. நீங்களும் இளையவர்தானே உங்களுக்கு தெரிந்திருக்கும். எங்கள் ஊரில் கங்கையும் யமுனையும் கலந்துதான் செல்கிறது. ஆனால் எல்லோரும் கங்கை என்றுதான் அழைப்பாரகள். நான் அதை யமுனை என்பேன். இளையவள் என்றால் யாரும் மதிப்பதில்லை"


விசித்ரவீர்யன் சிரித்தான் "சரிதான் , அனால் இப்போது நீ இருப்பது அஸ்தினாபுரம்  இங்கு நடப்பது யமுனையின் ஆட்சி."

"தெரியும், பேரரசியைக்கண்டால் எனக்கு கொஞ்சம் பயம். என் அக்காவுக்கு அவரை பிடிக்காது. நான் வரும்போது அவர் உங்களிடம் பேசிக்கொண்டியிருந்தார். நான் யாருக்கும் தெரியாமல் உள்ளே வந்து ஒளிந்துகொண்டேன்."

"ஆமாம் என் தயைப்பார்த்தால்  இங்கு எல்லோருக்கும் பயம்தான்."

"உங்களுக்கு பயமில்லையா "

"இல்லை, சாவைக்கண்டு அஞ்சாதவன் எதற்கும் அஞ்சுவதில்லை. தவிரவும் நான் அவரை உள்ளும் புறமும் அறிவேன். ஆழ்ந்து பார்த்தல் எதிலும் அச்சம் நீங்கிவிடும்"

"நான் எதையும் ஆழ்ந்து  பார்ப்பதில்லை. பார்த்தால்தான் பயமாக இருக்கும். நான் எதையும் அகண்டு பார்க்காவே செய்வேன். தொலைவிலிருந்து பார்த்தால் எல்லாம் தட்டையாக தெரியும். வெறும் வண்ணங்களாக. அதை நான் ஓவியமாக்கிக்கொள்வேன்."

விசித்ரவீர்யன் புருவங்களை உயர்த்தினான்.

"வந்தநாளில் இந்த அஸ்தினாபுரியைப்பார்த்து பயமாக இருந்தது. பின்னர் நான் பார்த்த காட்சிகளை ஓவியமாக வரைந்தேன். இப்போது பயமில்லை."

"ஆமாம் நீ ஓவியங்கள் வரைவாயா "

"ம் .. நிறைய. பீஷ்மரை அப்படிதான் வரைந்து வைத்தேன் முத்துக்கப்புறமாக. படகில் வந்தபோது பார்த்த அவரை அஞ்சினேன். இப்போது அச்சமில்லை "

"அஞ்சுவதை மட்டுமே வரையவாயா ?"

"அப்படி இல்லை. மனதில் நிற்கும் எல்லாவற்றையும் வரைவேன். உங்களைக்கூட வரைந்து வைத்திருக்கிறேன். நம் திருமண நாளில் பார்த்தபடி. ஒரு வாள். ஒரு மணிமுடி."

விச்த்திரவீரியன் வாய்விட்டுச்சிரித்தான் "ஆமாம் அவைதான் என் அடையாளம் அஸ்தினாபுரியில் . என் உடலை யாருக்கும் பிடிப்பதில்ல. எனக்கும்தான்."

"இல்லை இல்லை நீங்கள் அழகாகத்தான் இருக்கிறீர்கள். ஒரு பாலகனைப்போல . வெள்ளையாக இருப்பவர்கள் நல்லவர்கள் என்று எனக்குத்தோன்றும். கருப்பு என்னை அச்சறுறுத்தும்."


"வெள்ளை நிறங்களை தன்னுள் விடுவதில்லை . உண்மையில் கறுப்பே ஆழமானது . ஒளி நிலையாதது. இருளே எங்கும் இருப்பது . எல்லாம் அழிந்தபின்னும் எஞ்சுவது அதுவே "

"நான் ஆழத்தை வெறுப்பவள். கணநேரம் மின்னி மறையும் அற்புதம் வாழ்க்கை. அந்த கணநேர ஒளிதான் அதன் சிறப்பு. யாரும் இங்கே நிலைத்தவரில்லை. நான் கணநேரக்கட்சிகளை ஓவியமாக்கி நிலைக்கவைப்பேன் "

"நீ சொல்வது உண்மைதான். நானும் வாழ்க்கையின் உன்னதத்தை உணந்திருக்கிறேன்."

"வந்த செய்தியை மறந்துவிட்டேன். என்னோடு விளையாட வருவீர்களா?"

"விளையாடவா?"

"ஆமாம் சோலையில். என் அறைக்குப்பின்னால் இருக்கும் தோட்டம் . இங்கு யாரும் என்னோடு விளையாட வருவதில்லை. சேடிகள் எல்லோரும் அரசி என்று ஒதுங்கிச்செல்கிறார்கள். என் அக்காவும் எப்போதும் கோபமாக இருக்கிறாள். பிறரைக்கண்டால் பயமாக இருக்கிறது."

"என்னைப்பார்த்தால் பயமில்லையா?"

"இல்லை நீங்கள் ரத்தத்தில் செல்லும்போது நான் உப்பரிகையில் இருந்து பார்த்தேன். நீங்கள் என் பாண்டூகனைப்போல்   இருக்கிறீர்கள்." என்றவள் தன இடையில் ஒளித்து வைத்திருந்த வெண்முத்தை எடுத்துக் காட்டினாள், "என்னிடம் இந்த வெண்முத்து இருக்கிறது. உங்களுக்கு காட்டலாம் என்று எடுத்துவந்தேன்.நகைப்பெட்டகத்தில் கண்டெடுத்தேன். திருவிடத்திலிருந்து வந்தது என்று சிவை சொன்னாள். இதைக்கொண்டு விளையாடலாம் ".

"என்ன விளையாட்டு."

"மண்ணில் கோட்டைச்செய்து  சுற்றி நகர்செய்வோம். கோட்டைக்குள் இந்த முத்தை அரசனாக்கி அமரச்செய்வோம். வருகிறீர்களா?"

"இப்போது வெளியேசென்றுகொண்டிருக்கிறேன், பின்னொருநாள் விளையாடலாம்".

"கண்டிப்பாக நீங்கள் வரவேண்டும். நான் காத்திருப்பேன் "

"ஆணை அரசி. நானே வருகிறேன்."


"சரி நானும் வருகிறேன். சிவை பின்னல் காத்திருக்கிறாள் யாருக்கும் தெரியாமல் அந்தப்புரம் போய்விடுவேன். இங்கு நான் உங்களை சந்தித்ததை யார் கேட்டாலும் சொல்லாதீர்கள் . குறிப்பாக என் அக்கா கேட்டால் ."

"சரி அரசி யார்  கேட்டாலும்  சொல்லமாட்டேன் ".

அம்பாலிகை சத்தம் இன்றி மெல்ல காலடி  எடுத்துவைக்கிது வெண்பூனைக்குட்டிபோல் ஓடிச்சென்றாள். அவள் போன பின்னும்  அவளின் அகண்ட கண்களையே விசித்ரவீர்யன் சிலகணங்கள் எண்ணிக்கொண்டிருந்தான் .

"அகல்விழி அன்னை ".

ஸ்தானகர் அறைக்கதவை தட்டும் சத்தம் கேட்டது . "அரசே அனைத்து மருத்துவர்களும் முகமண்டபத்தில் காத்திருக்கிறார்கள் ".

விசித்திரவீரியன் கதவைத்திறந்து வெளியேவந்தான்.

அங்கு நடந்ததைப்பற்றி அம்பாலிகை யாரிடமும் சொல்லவில்லை. விசித்திரவீரியனிடம் யாரும் கேட்கவில்லை.





No comments:

Post a Comment